search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயங்கரவாத தாக்குதல்"

    • நேற்று நள்ளிரவு தொடங்கி அதிகாலை 2:15 மணி வரை தாக்குதல் நடந்துள்ளது.
    • உயிரிழந்த இருவரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் சிஆர்பிஎப் 128 பட்டாலியனைச் சேர்ந்தவர்கள்.

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் இரு இன குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் மாநிலம் முழுவதும் கலவரமாக மாறி ஏராளமானோர் உயிரை பறித்தது.

    இன்னமும் அந்த கலவரத்தில் இருந்து மணிப்பூர் மாநிலம் விடுபடவில்லை. அடிக்கடி இரு இன மக்களும் மோதலில் ஈடுபடுகிறார்கள்.

    இந்த நிலையில் மணிப்பூரில் நேற்று பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. இதற்காக துணைநிலை ராணுவத்தினர் அங்குள்ள வாக்குச்சாவடிகளில் குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் பிஸ்னுபூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட துணைநிலை ராணுவத்தினர் மலையடி வார கிராமத்தில் தங்கியிருந்தனர்.

    நரைன்சைனா என்ற கிராமத்தில் துணைநிலை ராணுவத்தினர் ஓய்வு எடுத்து வந்தனர். நேற்று இரவு 12.30 மணியளவில் அந்த முகாம் மீது மணிப்பூர் பயங்கரவாத குழு ஒன்று திடீர் தாக்குதல் நடத்தியது. மலையில் பதுங்கி இருந்தபடி அவர்கள் சரமாரியாக கையெறி குண்டுகளை வீசி தாக்குதல்களை நடத்தினார்கள்.

    இதையடுத்து ராணுவ வீரர்களும் பதிலடி தாக்குதலை மேற்கொண்டனர். இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இன்று அதிகாலை 2.30 மணி வரை இந்த தாக்குதல் நீடித்தது.

    இதில் ஏராளமான துணைநிலை ராணுவத்தினர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் துணைநிலை ராணுவத்தின் சப்-இன்ஸ்பெக்டர் சர்கார், தலைமை போலீஸ்காரர் அருப்சைனி ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

    10-க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிரவாதிகளை பிடிக்க அந்த பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • நாட்டையே உலுக்கிய இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
    • 4 பேரையும் வருகிற மே மாதம் 22-ந்தேதி வரை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    மாஸ்கோ:

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள குரோகஸ் சிட்டி ஹாலில் மிகப்பெரிய இசைநிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் நுழைந்தனர். அவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அங்கு சென்றிருந்த 133 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 152-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது.

    நாட்டையே உலுக்கிய இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கிடையே தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோட முயன்ற டாலர்சோன் மிர்சோயேவ் (வயது 32), சைதாக்ரமி (30), சம்சுதீன் பரிதுனி (25) மற்றும் முகமது சோபிர் (19) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் இருவர் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த 4 பேரையும் வருகிற மே மாதம் 22-ந்தேதி வரை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    • உயிர்களை காப்பாற்ற அயராது உழைத்த ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு தீயணைப்பு வீரர்களுக்கு மீட்பு பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
    • மார்ச் 24-ந் தேதியை (இன்று) தேசிய துக்க நாளாக அறிவிக்கிறேன்.

    மாஸ்கோ:

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் 143 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதல் ரஷியாவை உலுக்கியுள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய 4 பேர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாஸ்கோ இசை நிகழ்ச்சியில் நடந்த தாக்குதல், ரத்தம் தோய்ந்த மற்றும் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயல். இதில் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களை சுட்டுக் கொன்று பயங்கரவாத செயலில் ஈடுபட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உக்ரைனுக்கு தப்ப முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    எல்லையை கடக்க முயன்ற அவர் களை ரஷிய அதிகாரிகள் பிடித்தனர். பயங்கரவாதியாக இருப்பவர்கள், தாக்குதலுக்கு திட்டமிட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும். பயங்கரவாதிகள் கொலைகாரர்கள், தவிர்க்க முடியாத விதியை எதிர்கொள்வார்கள்.

    உயிர்களை காப்பாற்ற அயராது உழைத்த ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு தீயணைப்பு வீரர்களுக்கு மீட்பு பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மார்ச் 24-ந் தேதியை (இன்று) தேசிய துக்க நாளாக அறிவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.

    • முழு அரங்கமும் தீப்பற்றி எரிந்து சேதம் அடைந்தது.
    • இந்த கடினமான நேரத்தில் ரஷிய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இந்தியா உறுதுணை நிற்கிறது என கூறியுள்ளார்.

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கிரோகஸ் சிட்டி அரங்கில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் மர்மநபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 60 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவத்தால் முழு அரங்கமும் தீப்பற்றி எரிந்து சேதம் அடைந்தது.

    தாக்குதல் நடத்தியவர்கள் யார்? பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களா? என போலீஸ், புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், மாஸ்கோவில் நடந்த கொடூரமான தீவிரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம் என பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    மேலும் இந்த கடினமான நேரத்தில் ரஷிய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இந்தியா உறுதுணை நிற்கிறது என கூறியுள்ளார்.

    • இசை அரங்கிற்குள் திடீரென புகுந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டது.
    • மேற்கூரையின் இடிபாடுகளில் சிக்கிய நபர்களில் இருந்து பலரும் மீட்பு குழுவினரால் வெளியே கொண்டு வரப்பட்டனர்.

    மாஸ்கோ:

    ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து மேற்கு பகுதியில் குரோகஸ் சிட்டி ஹால் என்ற பெயரில் இசை அரங்கு ஒன்று அமைந்துள்ளது. 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடும் பரப்பளவு கொண்ட இந்த அரங்கத்தில், பிரபல இசைக்குழு ஒன்றின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் அரங்கிற்குள் திடீரென புகுந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டது. உள்ளே கூடியிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும், அரங்கிற்கு தீ வைத்தும் தாக்குதலை நடத்தியது.

    இதனால் உள்ளே இருந்த ஆண்கள், பெண்கள் என அனைவரும் அலறியடித்து ஓடினர். இந்த தீ விபத்தில், இசை அரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அந்த புகை அரங்கம் முழுவதும் பரவியது. இதனால் மக்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்தனர். இந்த விபத்தில் பலர் உயிரிழந்தனர்.

    இதுபற்றி ரஷிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்து உள்ளது. 100-க்கும் கூடுதலானோர் காயமடைந்து உள்ளனர்.

    60 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர் என தெரிவித்து உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனை தொடர்ந்து, 70-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் சம்பவ பகுதிக்கு சென்று உள்ளன. போலீசாரும் குவிக்கப்பட்டனர். மேற்கூரையின் இடிபாடுகளில் சிக்கிய நபர்களில் இருந்து பலரும் மீட்பு குழுவினரால் வெளியே கொண்டு வரப்பட்டனர்.

    இது, பயங்கரவாத தாக்குதலாக இருக்கும் என்று முதலில் கூறப்பட்டது. இந்த சூழலில், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டுள்ளது.

    ரஷியாவில் சில நாட்களுக்கு முன் நடந்த அதிபர் தேர்தலில் புதின் வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார். 5-வது முறையாக வெற்றி பெற்ற அவர், தொடர்ந்து பதவி காலம் முழுவதும் அதிபராக நீடிப்பார். இதனால், உக்ரைனுக்கு எதிராக 2 ஆண்டுகளாக நடந்து வரும் போர் தீவிரமடைய கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த சூழலில், நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பயங்கரவாதிகள் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை போஸ்ட் மீது மோதினர்.
    • நடவடிக்கையின் போது, ஆறு பயங்கரவாதிகளையும் சுட்டு கொன்றனர்.

    ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள வடக்கு வஜிரிஸ்தானின் பழங்குடியினர் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் இன்று 6 பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்தியதில் இரண்டு அதிகாரிகள் உட்பட குறைந்தது ஏழு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில், ஒரு லெப்டினன்ட் கர்னல் மற்றும் ஒரு கேப்டன் உள்பட ஐந்து வீரர்களுடன் கொல்லப்பட்டனர். மிர் அலி பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் தாக்குதல் நடத்திய 6 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இதுகுறித்து ஐஎஸ்பிஆர் அறிக்கையின்படி," பயங்கரவாதிகள் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை போஸ்ட் மீது மோதியதாகவும், அதைத் தொடர்ந்து பல தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடந்தன.

    அதைத் தொடர்ந்து நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையின்போது ஆறு பயங்கரவாதிகளையும் சுட்டு கொல்லப்பட்டனர்".

    பயங்கரவாத தாக்குதலில் லெப்டினன்ட் கர்னல் சையத் காஷிப் அலி மற்றும் கேப்டன் முகமது அகமது பதார் ஆகியோர் கொல்லப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தாக்குதலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்
    • ஜோ பைடன், ஜில் பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் வெவ்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு

    2001ல் செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் புகழ் பெற்ற உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்களின் மீதும், அமெரிக்க ராணுவ தலைமையகம் இருக்கும் பென்டகன் கட்டிடம் மீதும், கடத்தப்பட்ட விமானங்களை கொண்டு பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். மேலும் வேவ்வேறு இடங்களில் இரு தாக்குதல்களை பயங்கரவாதிகள் நிறைவேற்றும் முன்பாக அவை முறியடிக்கப்பட்டது.

    9/11 தாக்குதல் எனப்படும் இந்த நாச வேலையினால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். சம்பவம் நடந்து 22 ஆண்டுகள் ஆன நிலையில், அதன் நினைவு தினம் இன்று அமெரிக்கா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

    அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள ஆன்கரேஜ் (Anchorage) எனும் இடத்தில் இது தொடர்பாக நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கலந்து கொள்கிறார். செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் இந்தியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு வியட்னாம் நாட்டிற்கு சென்ற அவர், திரும்பி வரும் போது இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலத்தில் கூச்லேண்ட் கவுன்டி எனும் இடத்தில் உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் ஆகிய இடங்களில் நடந்த தாக்குதலுக்கு பிறகு எஞ்சியிருந்த எக்கு தகடுகளை கொண்டு அத்தாக்குதலில் உயிரிழந்தோருக்கு 2013ல் ஒரு நினைவில்லம் அமைக்கப்பட்டது. இங்கு 2 நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுமார் 25 ஆயிரம் பேர் வசிக்கும் இந்த கவுன்டி பகுதியில் பேரிடர் மற்றும் ஆபத்தான நேரங்களில் உதவிக்கு விரைந்து வரும் வீரர்களுக்கு காலையிலும், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மாலையிலும் அவர்களை நினைவு கூறும் விதமாக நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    மவுன அஞ்சலி, மெழுகுவர்த்தி ஏந்திய ஊர்வலம் உட்பட பல நிகழ்ச்சிகள் அமெரிக்கா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

    மற்றொரு அமெரிக்க மாநிலமான இண்டியானாவில் உள்ள கொலம்பஸ் பகுதியில் அமெரிக்காவின் அவசர மற்றும் ஆபத்து காலசேவை பணியாளர்கள் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் அவசர மருத்துவ சேவை பணியாளர்கள் (EMS) ஆகியோருக்கு நன்றி கூறி அவர்களை நினைவுகூறும் விதமாக நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    ஆண்கள் மற்றும் பெண்கள் சாரணர் படையினர் மிசோரி மாநில ஃபெண்டன் பகுதியில் நடைபெறவுள்ள ஒரு நிகழ்ச்சியில் 9/11 தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.

    அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் தரைமட்டமான உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்களின் நிலப்பகுதி, கிரவுண்ட் ஜீரோ (Ground Zero) என அழைக்கப்படும். இங்கு அமெரிக்க துணை அதிபர் பங்கு பெறும் நிகழ்ச்சியில் மேடையில் அத்தாக்குதலில் இறந்தவர்களின் பெயர்கள் ஒவ்வொன்றாக படிக்கப்படும்.

    முதல் பெண்மணி என அழைக்கப்படும் அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடன் பென்டகனில் உள்ள நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.

    • சீன பொறியாளர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • இந்த தாக்குதலுக்கு பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.

    புதுடெல்லி:

    சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டமானது (சிபிஇசி) சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தை பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடர் துறைமுகத்துடன் இணைக்கும் மிகப்பெரிய திட்டமாகும். இந்த திட்டப் பணிகளில் சீனாவைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு பாகிஸ்தானில் பாகிஸ்தானில் செயல்படும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) என்ற  அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சீன அரசாங்கம் தங்கள் பிராந்தியத்தில் முதலீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த முதலீடுகளால் உள்ளூர் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்றும் கூறி அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் குவாடர் துறைமுகத்தில் உள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பொறியாளர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் இன்று நடத்தினர். அவர்களுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சீன பொறியாளர்கள் தரப்பிலோ, பாகிஸ்தான் மக்கள் தரப்பிலோ யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தாக்குதலுக்கு பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது. பிஎல்ஏ-வின் மஜீத் பிரிகேட் பிரிவு இன்று குவாடரில் சீன பொறியாளர்களின் வாகனங்களை குறிவைத்து தாக்கியதாகவும், தாக்குதல் தொடர்வதாகவும் பிஎல்ஏ கூறி உள்ளது.

    • ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் 5 வீரர்கள் பலியாகினர்.
    • இச்சம்பவம் ஜம்மு காஷ்மீரில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பிம்பர் காளி என்ற இடத்தில் ராணுவ வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்தது. தீ வேகமாக பரவி வாகனம் முழுவதும் எரிந்தது.

    இந்த கோர விபத்தில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் ஜம்மு காஷ்மீரில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்தது என முதல் கட்ட தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசியதில் தான் ராணுவ வாகனம் தீ பிடித்துள்ளது என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ராணுவம் கண்டறிந்துள்ளது.

    இந்த தாக்குதலில் காயம் அடைந்த வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

    • துப்பாக்கி ஏந்திய பயங்கவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.
    • அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் இன்று திடீர் தாக்குதல் நடத்தினர். ரஜோரி மாவட்டம் டங்ரி கிராமத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த 3 வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.

    பயங்கரவாதிகள் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர் என ஜம்மு போலீசார் தெரிவித்தனர்.

    கிராமத்துக்குள் புகுந்து அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    • காவல்நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 போலீசார் உயிரிழந்தனர்.
    • இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்துவா மாகாணத்தின் தெற்கு வாரிஸ்தான் மாவட்டதில் லாகி மர்வத் என்ற பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

    கையெறி வெடிகுண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடத்திய நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த தாக்குதலில் 4 போலீசார் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரீப் அல்வி இரங்கல் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை முற்றிலுமாக அழித்தொழிப்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

    • ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வாபஸ் பெற்று ஒரு ஆண்டுக்கு மேலாகிறது.
    • தலிபான்கள் கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றினார்கள்.

    இஸ்லாமாபாத்:

    ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வாபஸ் பெற்று ஒரு ஆண்டுக்கு மேலாகிறது. தலிபான்கள் கடந்த ஆண்டு அங்கு ஆட்சியைக் கைப்பற்றினார்கள். அவர்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்து ஒரு ஆண்டு முடிந்துள்ளது.

    இந்நிலையில், தலிபான்கள் ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டில், பாகிஸ்தானில் 51 சதவீதம் அளவுக்கு பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

    பாகிஸ்தானில் ஆகஸ்ட் 2020 முதல் ஆகஸ்ட் 14, 2021 வரை நடத்தப்பட்ட 165 தாக்குதல்களில் 294 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 598 பேர் காயமடைந்தனர் என இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த பாகிஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் பீஸ் ஸ்டடீஸ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    ஆனால், ஆகஸ்ட் 15, 2021 மற்றும் ஆகஸ்ட் 14, 2022 க்கு இடையில் நடந்த 250 தாக்குதல்களில் 433 பேர் கொல்லப்பட்டனர். 719 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

    ×